பிப்.27.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து பாசஞ்சர் ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. தற்போது பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மதுரை எம். பி.சு.வெங்கடேசன் கொடுத்துள்ள அறிக்கை-
கொரோனா காலத்தில் சாதாரண கட்டண பயணிகள் வண்டிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அவை சிறப்பு விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டு விரைவு ரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. எளிய மக்களிடமிருந்து இரண்டு மடங்குக் கட்டணத்தை வசூலிக்கும் கொடிய செயலாக இது இருந்தது.
இதனைக் கைவிட வேண்டும் என நான் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளோம். இரயில்வே அமைச்சரிடம் நேரடியாகவும் வலியுறுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சனையை எழுப்பியுள்ளோம்.
ஒரு வாரத்துக்கு முன்பு ரயில்வே வாரியம் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களில் சாதாரண கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் கவுண்டர்களில் விரைவுக் கட்டணமே வதலிக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு ரயில்வே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும், சிறப்பு விரைவு ரயில்களில் சாதாரண பயண கட்டணம் வசூவிக்க அறிவுறுத்தி உள்ளது தெற்கு ரயில்வேயில் மதுரை, சென்னை, திருச்சி கோட்டங்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும், சிறப்பு விரைவு ரயில் சாதாரண கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இன்னும் சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்கள் உத்தரவிடவில்லை.உத்தரவிடப்பட்டுள்ள கோட்டங்கள் இன்று முதல் சாதாரணக் கட்டணம்- பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் கோட்டங்களில் விரைவுக் கட்டணமே வசூலிக்கப்படும் முரண்பாடு நிலவுகிறது.
ரயில்வே வாரியம் இதற்கான உத்தரவை அனுப்பாததால் இந்த முரண்பாடு நிலவுகிறது. இரயில்வே துறை வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் எனக்கருதி இப்படி செயல்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது.
அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் பொருந்தும் படி, அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சிறப்பு விரைவு ரயில்களில் சாதாரணக் கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று நான் ரயில்வே வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன்.இதில் காலதாமதம் செய்தால் அது பயணிகளிடையேயும் ரயில்வேக்களிடையேயும் பாரபட்சத்தை உருவாக்கும். மக்கள் பாதிப்பு தொடரும். எனவே ரயில்வே வாரியம் விரைந்து இதற்கான உத்தரவை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் வெளிப்படையாக அறிவிக்க கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.