பிப்.9.
நெல் கொள்முதல் நிலையத்தினை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின் கலெக்டர் தெரிவித்ததாவது-
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக திகழ்கிறது. அந்த வகையில் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் நெற்பயிற்களுக்கு அதிகபட்ச ஆதார விலை கிடைப்பதற்காக தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை கொண்டுவருகிறது.
அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2024-25 விவசாயிகள் நலன் கருதி விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தற்போது கரூர் மாவட்டத்தில் 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது தற்போது 12 இடங்களில் (சின்னப்பனையூர், பணிக்கம்பட்டி, திருச்சாம்பூர், நச்சலூர், நங்கவரம், கே.பேட்டை, கழுகூர், வலையப்பட்டி, கட்டளை, வீரராக்கியம், மேட்டுமகாதானபுரம் மற்றும் அஞ்சூர்) ஆகிய பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மீதம் உள்ள 6 இடங்களில் (கட்டளை, வளையகாரன் புதூர், கோவக்குளம், சின்னதாரா புரம், மொச்சக் கொட்டாம்பாளையம் மற்றும் பஞ்சமாதேவி) ஆகிய இடங்களில் விரைவில் நெல் விளைச்சலுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 09.01.2025 முதல் 05.02.2025வரை நெல் சன்ன ரகம் 4097.280 மெ.டன்னும் மற்றும் பொது ரகம் 90.480 மெ.டன்னும் என மொத்தம் 4187.780 மெடன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரூ.8,17, 32,762/-சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
சன்ன ரகம் நெல் (கிரேடு எ) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450/க்கும் (குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2320/- + ஊக்கத் தொகை ரூ.130/-) பொது ரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2405/ (குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2300/ ஊக்கத் தொகை ரூ.105/-) க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
வீரராக்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் தரம். கொள்முதல் பதிவேடுகள். பணிபுரியும் பணியாளர்கள் விவரம் ஆகியவற்றினை ஆய்வு செய்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனுக்குடன் ஆலைகளுக்கு அனுப்பிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம். 17 % க்குள் இருக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை தமிழ்நாடு அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின்போது இணை இயக்குநர் (வேளாண்மை) சிவானந்தம், மண்டல மேலாளர் (நுகர்பொருள் வாணிப கழகம்) முருகேசன், அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.