செப்.9.
கரூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயஉதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ‘கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம்” 02.09.2022 அன்று உருவாக்கப்பட்டது.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்திற்கென தனியே இணையதள பக்கம் மற்றும் வலைபயன்பாடு உருவாக்கப்படும் என்ற சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி சமூக நலத் துறையின் இணையதளத்தில் தனியே இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. (https://tnsocialwelfare.tn.gov.in)
இந்த இணையதள பக்கத்தில் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்திற்கென தனியே உருவாக்கப்பட்டுள்ள
www.tnwidowwelfareboard.tn.gov.in பயன்பாட்டின் மூலம் தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற, தங்களது விவரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம்.
மேலும் உறுப்பினராக பதிவு செய்பவர்களுக்கு சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) போன்ற இன்னபிற உதவிகளை எளிதாக பெற்றுகொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.