ஜூலை.25.
கரூரில், திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி சக்திவேல் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி தொடங்கி வைத்து பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ மற்றும் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில சட்டத்துறை இணை செயலாளர் மணிராஜ், மாநகர செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி கழகச் செயலாளர்கள் கரூர் கணேசன், சுப்பிரமணி, அன்பரசன், ராஜா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் மனித உரிமை, சட்ட உரிமைகள் காக்க வேண்டும். பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் மாநில அரசையும், ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் இருந்து திமுகவினர் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.