ஜன.7.
திருச்சி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் இருந்து கள்ள நோட்டு கும்பல் காரில் சுற்றுவதால் கரூர் மாவட்டத்தில் சோதனை செய்ய வேண்டும் என கரூர் தனிப்பிரிவுக்கு தகவல் அனுப்பப்பட்டது . கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோந்து பிரிவினருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் அளிக்கப்பட்டது.
6 ம்தேதி இரவு 10:45 மணி அளவில் அரவக்குறிச்சி காவல் நிலையம் தடாகோவில் அருகில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் இரவு ரோந்து போலீசார் அந்த வழியாக வந்த இன்னோவா காரை மடக்கிப் பிடித்தனர். அதில் சீனிவாசன், பூபதி, ஐயப்பன், செந்தில்குமார், முத்துமாரி (நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள்) ஓட்டுநர் ஞானசேகர் (ஈரோடு) ஆகியோர் இருந்தனர்.
போலீஸ் விசாரணையில் இவர்கள் அனைவரும் கள்ள நோட்டு கும்பல் என தெரியவந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் கள்ள நோட்டுகளை இரட்டிப்பாக தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த நபர்களை சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் கைது செய்துள்ளார். மேலும் கூட்டாளியாக இருந்த பெண் உட்பட ஆறு நபர்கள் அங்கிருந்து தப்பி நாமக்கல் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் எதிரிகள் உஷாராகி விடக்கூடாது என்பதற்காக போலீசார் செயற்கையாக போக்குவரத்தை நிறுத்தி நெரிசல் ஏற்படுத்தினர். வாகனங்களுக்கு இடையே இனோவா கார் சிக்கிக் கொண்டது. அப்போது அனைவரையும் மடக்கிப்பிடித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர். இதில் சிறப்பாக பணிபுரிந்த கரூர் மாவட்ட இரவு ரோந்து டிஎஸ்பி தேவராஜன், அரவக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர்கள் சதீஷ்குமார், விஜயகுமார், முதல் நிலை காவலர் ஜாபர் சாதிக், ஆயுதப்படை காவலர் தினேஷ் குமார் மற்றும் ஊர் காவல் படையினர் மோகன், ராஜேஷ் ஆகியோரை கரூர் மாவட்ட எஸ்பி.சுந்தரவதனம் பாராட்டினார்.