ஜூன்.3.

சென்னை, சென்ட்ரலில் உள்ள தெற்கு இரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டினர் பற்றிய விவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களையும் இரயில்வே உயர் அலுவலர்களுடன் கேட்டறிந்தார். சென்னை, சென்ட்ரலில் உள்ள பயணிகள் விசாரணை மற்றும் உதவி மையத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று, ஒடிசா இரயில் விபத்து குறித்து பெறப்பட்ட அழைப்புகளின் விவரங்கள் குறித்தும், அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் சென்னை, எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் சென்றார்.ஒடிசா இரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தலைமைச் செயலாளர் இறையன்பு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஒரிசா ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பெயரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பனிந்ரரெட்டி, பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் , ஆசிரியர் தேர்வாணைய குழு தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழுவினர் விமான மூலம் ஓடிசா சென்றடைந்தனர். ஹெலிகாப்டர் மூலம் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்திற்கு சென்றனர். மற்றொரு குழுவினர் ஒடிசாவில் இதற்கான பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர். இக்குழுவினர் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த தொடர் நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்தது எப்படி? புதிய தகவல்
சென்னை ஹௌரா வழித்தடத்தில் உள்ள Bahanaga Bazar என்ற சிறிய ரயில் நிலையத்தில் ஒரு சரக்கு ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழி விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது 12864 பெங்களூரு ஹௌரா ரயில் 110 கிலோமீட்டர் வேகத்தில் அந்த ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதை அறிந்த என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். அதற்குள் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு மிகவும் விலகி அடுத்த தண்டவாளம் ஓரமாக சென்று விட்டன.
அதே சமயத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுக்கும் தடம் புரண்டு கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் இடையில் உள்ள பாதையில் 130 கிலோமீட்டர் வேகத்தில் வந்த சென்னை செல்லும் கோரமண்டல் ரயிலின் ஓட்டுனர் எதிரே வரும் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு தனது தண்டவாளத்தின் மீது விழுதைப் பார்த்து ரயிலைநிறுத்த முயற்சி செய்தபோது மோதிய வேகத்தில் இரண்டு பக்கமும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் சரக்கு ரயில் மீதும் பெட்டிகள் கடுமையாக மோதி தூக்கி எறியப்பட்டுள்ளன.
பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதற்கும் அந்த டிரைவர் கவனித்ததற்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து மோதியதற்கும் இடைப்பட்ட கால அளவு வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே. சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த சரக்கு ரயில் காத்திருந்தது தவிர மோதவில்லை என புதிய தகவல் வெளியாகி உள்ளது ரயில்வே துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.