ஜூன்.11.
சேலம் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் அவர் பேசியது-
கலைஞர் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் கொடி கம்பங்களை புதுப்பித்து கொடியேற்ற வேண்டும். தொண்டர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் . கலைஞர் ஆட்சி சாதனைகளைப் பட்டி தொட்டி எல்லாம் மக்களிடம் எடுத்துக் கூற நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தொண்டர்கள் தொடர்ந்து உழைக்கிறீர்கள் உழைப்பீர்கள் உழைப்பு வீண் போகாது. அங்கீகாரம் உங்களை வந்து சேரும். நான் இருக்கிறேன்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் என சாதாரணமாக இருந்து விடக்கூடாது. நாட்டில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது. ஆத்திரத்தில் அவர்கள் எந்த முடிவும் எடுப்பார்கள். கர்நாடக மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தொடர்ந்தால் நாடாளுமன்ற தேர்தல் முன் கூட்டியே வரலாம்.
ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன அமித்ஷாவினால் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?. மத்தியில் காங்கிரஸ் -திமுக கூட்டணி ஆட்சியில் சேது சமுத்திரத் திட்டம்- சேலம் உருக்காலை சேலம்-சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- சென்னை மதுரவாயல் இடையே பறக்கும் சாலை திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டங்கள், திருச்சி கோவை மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஆனால் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது?. தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவினால் பதில் சொல்ல முடியுமா?. அவர்கள் செய்ததெல்லாம் என்ன?. இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, நீட் தேர்வை திணித்தது, மாநில உரிமைகளை பறித்தது, தரவேண்டிய நிதியை தர மறுப்பது, இதுதான் அவர்கள் தமிழ்நாட்டுக்கு செய்துள்ளார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அருண் ஜெட்லி அறிவித்தார். 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி செயல்பாட்டுக்கு வந்து விட்டது. தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு மனமில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் தான் அதிமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலேயே தோல்வி. அடுத்து சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தனர்.
சசிகலாவின் காலில் விழுந்து பதவி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவரது காலையே வாரிவிட்டவர். பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துவிட்டார். அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து திமுக ஆட்சியை மக்கள் கொண்டு வந்தனர். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம். மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், பெண்கள் உயர்கல்விக்கு உதவி தொகை, படிக்கும் போதே வேலை வாய்ப்புக்கு பயிற்சி, மகளிர்க்கு உரிமை தொகை ரூ.1000 வழங்க இருக்கிறோம். இப்படி சாதனைகளை தொண்டர்கள் மக்களுக்கு தொடர்ந்து தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறப்போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.