மார்ச் 3.
கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூர் ராயலூரில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. .இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாஏற்பாடுகள் நடைபெறுவது குறித்து அரங்கத்திற்கு வந்துஅமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது-
திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் தளபதி அவர்கள் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்டாக உயர்த்தி, 01.3.2023 முதல் வழங்க உத்திரவிட்டுள்ளார். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூபாய் 8.41 கோடி நிதியை அரசு மானியமாக மின்சாரத்துறைக்கு வழங்கும். இதற்கு ஏற்கனவே அரசாணை தயார் செய்யப்பட்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. அதிமுக சார்பில் இதற்கு தேர்தல் ஆணையத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு திட்டம் என்பது மார்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் .
இதேபோன்று, விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 01.03.2023 முதல், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு வெறும் 70 பைசா அளவே உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூபாய் 53.62 கோடி நிதியை சேர்த்து மொத்தம் 484.52 கோடி ரூபாயை மின்சாரத்துறைக்கு மானியமாக அரசு வழங்கும் என்றார்.
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.