அக்.29.
மழைக்காலத்தில் கால்நடைகள் அதற்கு தேவையான அளவு மேய்வதற்கு காலஅவகாசம் இல்லாமல் போகும் என்பதால் அவ்வப்போது கால்நடைகளுக்கு உலர்தீவனம் மற்றும் அடர் தீவனங்களையும் சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டும்.
மழைக்காலங்களுக்கு தேவையான உலர் தீவனங்களை இயன்ற அளவு முன்பே சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு சேமிக்கும் உலர் தீவனங்கள் நன்கு உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஈரப்பதம் அதிகம் இருந்தால் பூஞ்சைகள் காளான் நச்சு உருவாகி கால்நடைகளின் உடல்நிலை பாதிக்கப்படும். மழை மற்றும் தொடரும் பனிக்காலங்களில் கால்நடைகளில் சிறிய காயங்களினால் ஈக்கள் முட்டையிட்டு அது புழுக்களாக மாறி பின்னர் பெரிதும் கால்நடைகளை பாதிக்கும். எனவே, சிறிய காயங்களாக இருப்பின் அதனை சுத்தம் செய்து போரிங் பவுடர் சல்பாநில்,அமைட் பவுடர் அல்லது வேப்ப எண்ணெய் தடவலாம். மிக முக்கியமாக கால்நடைகளின் கொட்டகைகள் சுத்தமாகவும்,தரமாகவும், தண்ணீர் தேங்காமல் பராமரிக்கப்பட வேண்டும்.
மரங்களின் அடியில் மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. அவ்வாறு கட்டப்படும் பட்சத்தில் கால்நடைகள் இடி, மின்னல் தாக்குதலுக்கு ஆளாக நேரிடலாம்.
பெரும்பாலான நோய்கள் கொசுக்கள் மூலமாக பாலவதால் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க தண்ணி தேங்காமல் பார்த்து கொள்வது. மாலை நோங்களில் தும்பை செடி, வேம்பு, துளசி, நொச்சி இலைகள் கொண்டு புகைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கோமாரி நோய், நீலநாக்கு நோய், துள்ளுமாரி நோய்களுக்கு அருகாமையிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முறையான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கு முறையான குடற்புழு நீக்கம் செய்து கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் தொடர்ந்து மழையில் நனையாமலும், மழைநீர் தேங்கி இல்லாமல் இருக்கும் பகுதியையும் தவிர்த்து சுத்தமான மேடான இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். காலையில் சூரிய உதயத்திற்குப் பின்னர் 2 முதல் 3 மணிநேரம் கடந்து மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும் கால்நடைகள் வயிறு முழுவதும் நிரம்பும் (வயிறு முட்டும் அளவு) அளவிற்கு மேய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கால்நடைகளின் அவசர் கால சிகிச்சைக்கு “1962” என்கிற இலவச தொலைபேசி எண் தொடர்பு கொண்டு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் மூலமாக இலவச சிகிச்சை பெற்றும், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை தொடர்பான பிற சேவைகளுக்கு “1800 425 5880″என்கிற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.