மார்ச், 8.
கரூர் தான்தோன்றிமலை தனியார் மஹாலில் மகளிர் சுய உதவி குழுவினர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு ஏதுவாக விற்பணையாளர் மற்றும் வாங்குவோர் இடையேயான மாவட்ட அளவிலான வணிக சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மகளிரை தொழில் முனைவோராக தரம் உயர்த்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் சார்ந்த பயிற்சி, தொழில் வாய்ப்புகள் குறித்த ஆலோசனை, மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான விபரங்கள் சேவை மையங்கள் மூலமாக தெரிவிக்கப்பட உள்ளது.
இதற்காக மதி சிறகுகள்-மகளிர் புத்துயிர் என்ற அமைப்பு பெயரில் புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. குழு விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கி மற்றும் வங்கிகள் கடன் கொடுத்து தொழில் செய்வதற்கான அனைத்து உதவிகளும் அளிக்கிறது என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அதற்கு முக்கிய காரணம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்துகிறார்கள். இதுபோன்ற திட்டத்தினை அறிந்து கொண்டு மகளிர் பயன்பெற கேட்டுக்கொள்வதாக கலெக்டர் தெரிவித்தார். 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ. 5.கோடி மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது. இன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 10 நிறுவனங்கள் மற்றும் மகளிர் உதவிக்குழுவினரிடையே ரூ.66.65 இலட்சம் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு, மகளிர் சுய உதவிக்குழுவினர். வணிகர்கள்.உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.