அக்.17.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் அரவக்குறிச்சி EB ஆபிஸ் அருகே 16.10.2024 ஆம் தேதி அதிகாலை 01.30 மணிக்கு அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் இரவு ரோந்து பணி செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை நிறுத்தி விசாரணை செய்த போது திடீரென அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து மேற்படி காவலர்கள் மீது அடித்து விட்டு தப்பிக்க முயன்றார். அவர்களை மடக்கி பிடித்து அரவக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து கரூர் ஊரக உட்கோட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கோகுல், 27/24, புதுப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கோகுல்நாத், 21/24, தொட்டியம், திருச்சி மாவட்டம் என தெரியவந்தது. மேற்படி நபர்கள் வைத்திருந்த பையை (Bag) சோதனை செய்ததில், அதில் 02 இரும்பு ராடுகள், திருப்புளி, மாஸ்க், கிளவுஸ், பெப்பர் ஸ்பிரே மற்றும் 02 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தனர். விசாரணையில் அரவக்குறிச்சி மற்றும் வெள்ளியணை பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடுவதற்காக வந்தது தெரியவந்தது.
மேற்கண்ட கோகுல் மீது திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 24 வழக்குகளும், கோகுல்நாத் என்பவர் மீது திருச்சி மாவட்டத்தில் 04 வழக்குகளும் உள்ளன. கரூர் நகர உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் (SD Crime Team) விசாரணை மேற்கொண்டு, வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இரவு ரோந்து அலுவலின்போது சிறப்பாக பணிபுரிந்து பல திருட்டு வழக்கில் தொடர்புடைய மேற்படி இரண்டு குற்றவாளிகளையும் பிடித்த தலைமைக்காவலர் சரவணன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோரை கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டினார்.