முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் அவரது சாதனைத் திட்டங்களையும், தியாக வரலாற்றையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டம் நங்கவரம் மற்றும் மாயனூரில் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட கழக செயலாளர் வி. செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமையில், கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. குளித்தலை நங்கவரத்தில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உணவு வழங்கினார்.
குளித்தலை தொகுதியில் கலைஞர் முதன் முதலில் 1957 ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் நங்கவரத்தில் 1956 ம் ஆண்டு அவரது தலைமையில் நடந்த நங்கவரம் பண்ணையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பண்ணையார்களின் 33412 ஏக்கர் நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து பன்னெடுங்காலமாக சாகுபடி செய்து வந்தார்கள். நில உச்சவரம்பு சட்டப்படி நிலங்களை விவசாயிகளுக்குத் தராததால் போராட்டத்தில் குதித்தனர்.
பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களின் ஆணையை ஏற்று, 1956ல் அந்தப் போராட்டத்தில் விவசாயிகளோடு கலைஞர் அவர்கள் போராட்டம் நடத்தினார். ‘உழுதவனுக்கே நிலம் சொந்தம்’, ‘நாடு பாதி, நங்கவரம் பாதி’ என்ற கோஷங்களோடு தொடர் போராட்டம் நடத்தியதையடுத்து விவசாயிகளுக்கு நிலங்களை கொடுக்க ஒப்புக்கொண்டனர்.
இதனால் குளித்தலை தொகுதியில் உள்ள 50 கிராம விவசாயிகள் மத்தியில் கலைஞருக்கு பெரும் செல்வாக்கு உண்டானது. அதனாலே தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் நிற்காமல் முதல் தேர்தலில் குளித்தலையில் நின்று வெற்றி பெற்று முதன்முறையாக 1957ல் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார்.
இதேபோன்று மாநில நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது கலைஞர் ஆட்சியில் இந்த கோரிக்கையை நிறைவேற்றினார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டம் நீர் பாசனம், குடிநீர் ஆதாரம் பெறுகின்ற வகையில், மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டினார். ஒரு டிஎம்சி தண்ணீர் கதவணையில் தேக்கி வைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் சென்றுவர 45 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி இருந்தது. பொது மக்கள் இந்த சிரமத்தை போக்குகின்ற வகையில் பாலத்துடன் கதவணை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனை நினைவு கூறும் வகையில் கலைஞர் பிறந்த நாள் விழா மாயனூர் கதவணை அருகே நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ, கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். எம்எல்ஏக்கள் இரா.மாணிக்கம், க.சிவகாமசுந்தரி, ஆர். இளங்கோ, நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.