ஜூலை. 21.
கரூர் மாவட்டத்தில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் இணை மானிய தொகுப்பின் கீழ் (New to Business Loan Segment) என்றகடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் அவர்கள் வழி காட்டுதலின்படி தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்டம் புத்துணர்வு பெற்று மேம்பாடுகள் செய்யப்பட்டு, வாழ்ந்து காட்டுவோம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் உலக வங்கி நிதிஉதவியுடன் தமிழ்நாடு அரசின் ஊரகவளர்ச்சி துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடனும் இத்திட்டம் தொடங்கப்பட்டதாகும்.
தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களில் ஊரகப் பகுதிகளில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், நிதிசேவைகளுக்கு வழி வகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு 31 மாவட்டங்களில் 3994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் குளித்தலை ஆகிய வட்டாரங்களில் 27 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊரகதொழில் முனைவோர்களுக்கு இணை மானிய நிதிதிட்டத்தில் 30 சதவீதம் மானியத்தில், வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் இது வரை புதிய மற்றும் பழைய தொழில் முனைவோர்கள் 60 நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தற்போது சிறிய மாற்றம் செய்து (New to Business Loan Segment) என்றகடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் செயல்படும் 27 ஊராட்சிகளில் புதியமற்றும் பழையதொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் இதுவரை வங்கியிலோ அல்லது பிறதுறை நிறுவனங்களிலோ அவர்கள் சார்ந்துள்ள தொழிலில் தொழில்கடன் பெறாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களை கண்டறிந்துதொழில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, 21 முதல் 45 வயதிற்குள் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்து தொழில் முனைவோராக விரும்பினால் சிபில் மதிப்பீடு, பயனாளி பங்கு தொகை போன்ற விதிகளுக்குட்பட்டு கடனுதவி செய்யப்படும். இந்த விதிகளின்படி கடன் பெறவிரும்புவோர் கரூர் வட்டாரம் 8825572239 குளித்தலை வட்டாரம் 8807878175 மற்றும் மாவட்ட அலுவலகம் 0431- 2670633 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டுபயன்பெறலாம்.
கரூர் மாவட்டத்தின் பிற வட்டாரங்களில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள். வணிகதிட்டம் மற்றும் தொழில் மேம்பாட்டிற்கு மதி சிறகுகள் அமைப்பின் தொழில் முனைவு நிதி அலுவலர் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலரை 9345751755 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுபயர் பெறலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.