ஜூன.17.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இந்த அதிநவீன செயற்கை கால்கள் ஜெர்மன் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்தியேகமாக, வழக்கமான செயற்கை கால்களை விட எடை குறைவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இச்செயற்கை கால்கள் நோயாளிகள் சுதந்திரமாகவும் நம்பிக்கையுடனும் நடக்க உதவுகிறது. மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர்களின் பரிந்துரைப்படி செயற்கை கால்கள் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுகின்றது. பராமரிப்பு மற்றும் பின்தொடர்தல் சேவைகளும் பயனாளர்களுக்கு அளிக்கப்படுவதால் இச்செயற்கை கால்களை நல்ல முறையில் உபயோகிக்க வழிவகுக்கிறது. கடந்த ஏப்ரல் 2024 முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை கால்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை 25 நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் இக்கால்கள் வழங்கப்பட்டுள்ளது. கால் முட்டிக்கு கீழும், கால் முட்டிக்கு மேலும் கால் அகற்றப்பட்டவர்கள், விபத்து அல்லது சர்க்கரை நோய், இரத்தக் குழாய் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் கால் நீக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை உள்ள பயனாளர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் பதிவு செய்து இந்த சேவையினை இலவசமாக பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.