மே.8.
பிளஸ் டூ தேர்வில் திண்டுக்கல் ஏழை மாணவி நந்தினி வரலாற்று சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் அந்த மாணவிக்கு பலதரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ஐ .பெரியசாமி மாணவியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மாணவி நந்தினி கூறுகையில், எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். என்னை தொடர்ந்து படிக்க வைத்தார். தொடர்ந்து நீ படிக்க வேண்டும் நான் படிக்க வைக்கிறேன் என்று ஊக்கப்படுத்தினார் . அவரது உழைப்பினால் தான் இந்த சாதனையை படைக்க முடிந்தது என்றார்.