செப்.25.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களுக்கு ஏற்கனவே 5 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
மேலும் திருகோயில்களில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த 3 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியது:-
ஏற்கனவே 5 திருக்கோயில்களில் பெண் ஓதுவார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற 15 ஓதுவார்களில் 5 பெண் ஓதுவார்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரையில் திருக்கோயிகளில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 34 ஓதுவார் பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 183 ஓதுவார் பணியிடங்களில் இதுவரை 107 ஓதுவார்கள் திருக்கோவில்களில் பணிபுரிந்து வருகின்றார்கள்
படிப்படியாக அனைத்து திருக்கோவில்களில் ஓதுவார் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற 3 பெண்கள் விரைவில் உதவி அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்பட இருக்கின்றார்கள். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக ஓராண்டுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.8,000 வழங்கப்படும் என்றார் அமைச்சர்.