நவ.17.
கரூர் அருகே கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கியத்தில் மூன்று பேர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவலாக மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கரூர் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 15 ம் தேதி மோகன்ராஜ், சிவகுமார் , ஆகியோர் கழிவு நீர் தொட்டி கட்டுமானங்களை அகற்ற சென்றபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர் . இதுபற்றி அறிந்து இவர்களை காப்பாற்ற சென்ற மற்றொரு கட்டிட தொழிலாளி ராஜேஷ்என்பவரும் விஷவாயு தாக்கியதில் பலியானார். கரூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்போது மணவாசி சின்னமலை பட்டியை சேர்ந்த கோபால் என்பவரது சடலமும் நான்காவதாக கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியானதை கேள்விப்பட்ட கோபால் குடும்பத்தினர் இது குறித்து கோபாலை தேடி வந்தனர். கட்டட வேலைக்கு சென்ற அவரைக் காணவில்லை என காவல் துறையில் புகார் அளித்தனர். கோபாலின் சகோதரர் சம்பவம் நடந்த கட்டட பகுதியில் சென்று தேடிப் பார்த்தபோது அவரது செருப்பு அப்பகுதியில் கிடந்தது தெரிய வந்தது. மேலும் அவரது உடைகளும் காணப்பட்டது. உடனடியாக இது குறித்து கரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மீண்டும் தீயணைப்பு படை வீரர்கள் இறங்கி கோபால் சடலம் கண்டெடுக்கப்பட்டது .
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . விஷவாயு குழி என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன், தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கி முதலில் மூன்று பேரை மீட்டனர். மேலும் மூன்று பேர் குழியில் சிக்கியிருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாலும் மயங்கிய நிலையில் இருந்த அவர்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மேற்கொண்டு அங்கு தேட வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. மூன்று பேர் தான் என அங்கிருப்பவர்கள் கூறியதாலும், வெளிச்சம் இல்லாததாலும் விஷவாயு தாக்கம் இருந்ததாலும் மேற்கொண்டு இறங்கி தேடாமல் திரும்பி விட்டனர். எத்தனை பேர் வேலைக்கு வந்தனர் எத்தனை பேர் பணியில் இருக்கின்றனர் என்ற விபரம் கூட தெரியாமல் கட்டுமான நிறுவனம், வேலை வாங்கியவர்கள் செயல்பட்டு இருக்கின்றனர். வாரம் முடிவில் சம்பளம் கொடுக்க வேண்டும் ஆள் வராவிட்டால் கவலை இல்லை என்கிற மெத்தென போக்கில் செயல்பட்டுள்ளனர். மேலும் ஓருவரை காணவில்லை சந்தேகமாக இருக்கிறது என அப்போதே தெரிவித்து இருந்தால் தீயணைப்பு படையினர் அவரது சடலத்தையும் மீட்டு இருப்பார்கள். இதை கவனிக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மெத்தன போக்கினால் மேலும் ஒரு உயிர் பறிபோய் உள்ளது. தற்போது கோபாலின் சகோதரர் அளித்த தகவலின் பெயரில் மீண்டும் இறங்கி தேடி சடலத்தை மீட்டுள்ளனர்.