ஜூன்.12.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியது-
முதலமைச்சர் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பதற்காக, புதிய தார்ச்சாலைகள் அமைக்க ரூபாய் 200 கோடி சிறப்பு நிதி வழங்கப்பட்டு பணிகள் நிறைவுற்று மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று புதிதாக முதல்வர் ஆணைக்கிணங்க 173 கி.மீ.சாலை அமைக்க ரூ. 71 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு மாநகராட்சி நிதியுடன் 260 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சியில் மட்டும் சாலை பணிகள் மற்றும் எம்ஜிஆர் மார்க்கெட், அண்ணா மார்க்கெட் சீரமைப்பு பணிகளும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் குறித்து அரசின் சார்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு எவ்வித கட்டணமும் உயர்வு இல்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய இலவச மின் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த சிறிய அளவிலான மாற்றம் என்பது ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவுறுத்தி ஆண்டுக்கு ஏற்படுகின்ற செலவின்ங்களின் அடிப்படையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக மின்சாரம் குறித்தோ அரசின்மீதோ அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, சிலர் வன்மங்களை மனதில் வைத்துக் கொண்டு கூறிக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக்கில் இரண்டு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அன்புமணி கூறியிருக்கிறார் . ஒரு வருஷத்துக்கு விற்பனையே 45 ஆயிரம் கோடி தான். எப்படி இரண்டு லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்படும். புரியவில்லை. இதை ஆராயாமல் செய்தியாக வெளியிட்டு கேள்வியாகவும் கேட்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் எவ்வளவு விற்பனை எவ்வளவு இழப்பு என அவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்டால் அவர்களுக்கும் புரிந்திருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது எங்கேயாவது சேர்ந்து ஒரு சீட் பெற வேண்டும் என்பதற்காக கிருஷ்ணசாமி போன்றவர்கள் கூறி வருகிறார்கள். எவ்வளவு கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறார்கள் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் சொன்னார் இவர் கூறியிருக்கிறார் என கேள்வி கேட்பது சரியல்ல. நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கூறும்போதே நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்கள் நலன் சார்ந்த பாதிப்பு மற்றும் புகார்களை யார் தெரிவித்தாலும் துறையும் சரி அரசும் சரி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூறப்படும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை.
உங்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை என கேள்வி கேட்டீர்கள் என் வீட்டிற்கு வரவில்லை சார் . எந்தெந்த இடங்களுக்கு சென்றார்களோ அங்கு சோதனைக்கு முழு ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்கள். என்னென்ன ஆவணங்கள் கேட்டார்களோ முழுமையாக சமர்ப்பித்துள்ளனர். மேலும் கூடுதல் ஆவணங்களை கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்றார்.