பிப்.20.
சென்னையில் தனியார் ஹோட்டலில் இன்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம்,கு.ப.கிருஷ்ணன், எம் எல் ஏ மனோஜ் பாண்டியன், jct பிரபாகர், புகழேந்தி மருதுஅழகுராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் பேசியது-
2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது; தேர்தல் ஆணையத்திலும் இந்த ஆவணங்கள்தான் உள்ளன . எந்த அளவுக்கு அதிமுகவின் சட்டவிதிகளை சிதைக்க முடியுமோ, அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகளை சிதைத்தனர். சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர்.
நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேலாக, மக்களின் தீர்ப்பு என ஒன்று இருக்கிறது, கூடிய சீக்கிரம் அது வரும். நாம் தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் சென்றுகொண்டிருக்கிறோம் . எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள்; முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம். அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது. அவர் பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை, அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார். அதிமுகவை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-
தற்போது மாவட்டந்தோறும் நியமனம் செய்யப்பட்டு வரும் நிர்வாகிகளின் பணியை மேலும் துரிதப்படுத்தி, விரைவில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என தீர்மாளிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பிறந்தநாள் விழாமற்றும் ‘கழகத்தின் பொன் விழா’ என முப்பெரும்விழாவினை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர். ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கழகத்தை சர்வாதிகார கும்பலிடமிருந்து மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், ‘இரட்டை இலை சின்னத்தையும் நிரந்தரமாகப் பெற்று, “2019 மக்களவைத் தேர்தல் தோல்வி”, 2019 கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி”, “2021 சட்டமன்றத் தேர்தல் தோல்வி”, ‘2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி’ என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அடுத்தவர்களை அழித்தால்தான் செம்மை பெற முடியும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு தக்கப் பாடம் புகட்டி, கழகத்தினர் அனைவரும் செம்மை பெற வழிவகுக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.