பிப்.21.
பண மோசடி வழக்கில் கரூர் அன்புநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிமுக மாஜிக்கள்- போலீஸ் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைத் சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதன் (55). இவர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு நெருக்கமானவர். இவருக்கும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்த பிரகாஷ் (42) என் பவருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து பிரகாஷ் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அன்புநாதனை தேடிவந்தனர்.
பிரகாஷ் கடந்த 2018 ஆம் ஆண்டில் அன்புநாதனுக்கு ரூ.1 கோடி கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அய்யம்பாளையத்தில் சிமென்ட்குடிநீர் குழாய்உற்பத்தி நிறுவனம் நடத்தி வரும் அன்புநாதன், தனது நிறுவனத்தில் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாக கூறி, பிரகாஷிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு ரூ.2 கோடி வாங்கினாராம். பங்குதாரராகவும் சேர்க்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததால் பணத்தை கேட்ட போது அன்புநாதன் மிரட்டியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து போலீசார் அன்பு நாதனை கைது செய்தனர்.
அதிமுக ஆட்சியின் போது நத்தம் விசுவநாதன் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் . அப்போது கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் அன்புநாதன் மீதும் விசாரணை நடத்தினார் . இதில் மேலும் பல அதிமுக மந்திரிகள் தொடர்பு இருப்பது அம்பலமானது.. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அய்யம்பாளையத்தில் உள்ள குடோனில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் கடத்தப்படுவதாக எழுந்த புகார் தேர்தல் கமிஷனுக்கு சென்றது. போலீசாரும் வருவாய் துறை, வருமானவரி துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் பணம் என்னும் இயந்திரங்கள் ஆம்புலன்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறைக்கு வழக்கு சென்றது. இந்த வழக்கை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கிடப்பில் போட்டு விட்டனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கரூர் தொகுதி பிரச்சாரத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி காரில் அன்புநாதன் வந்து இறங்கினார். மேலும் அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்திய போது போலீஸ் ஐஜி ஒருவர் வருமானவரி துறை அதிகாரிகளிடமும், போலீஸ் அதிகாரிகளிடமும் பேசி, அன்புநாதனுக்கு ஆதரவாக நடந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அன்புநாதன் கைது செய்யப்பட்டிருப்பதால் முன்னாள் அதிமுக மாஜிக்கள் மற்றும் ஏற்கனவே முக்கிய பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.