மே.1.
உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசியது-
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடினார்கள். வெயிலில், மழையில், பனி, இதுபோன்ற கொடுமையில் அவர்கள் போராடி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் போராடிய காரணம் உங்களுக்குத் தெரியும். அதனால் பலபேர் உயிரையும் இழந்திருக்கிறார்கள். இந்த மாபெரும் உழவர்களின் போராட்டத்தைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களை வதைபடக்கூடிய நிலையில் விட்டுவிட்டார்கள்.
அதேபோல, எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து ஒரே இரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, அதில் மகிழ்ச்சியடைந்தவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களைப் போராடவிட்டு ரசித்தவர்கள். தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், இவர்களுக்கு ஊதுகுழலாக இருக்கக்கூடிய சில ஊடகங்களும் இதனை நமது அரசுக்கு எதிராக மாற்றிவிடலாம் என்று திட்டமிட்டு பிரச்சாரத்தைப் பரப்பினார்கள். ஆனால், அவர்களுடைய தீய எண்ணங்களையெல்லாம் தொழிலாளத் தோழர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். தொழிற்சங்கத்தினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட இரண்டே நாளில் அந்த சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்ற தொழிலாளர் தோழன்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு;
விட்டுக் கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாகக் கருதியது இல்லை, அதை பெருமையாக கருதிக் கொண்டிருக்கக்கூடியவன்.
ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது துணிச்சல் என்றால் அதனை உடனடியாகத் திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான், அதை மறந்துவிடக்கூடாது. இப்படித்தான் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு பயிற்சி தந்திருக்கிறார்கள். எனவே. அதனால்தான் அதனை நிறுத்தி வைத்திருக்கிறோம்.
இதுகுறித்த தகவல் பேரவைச் செயலகத்திற்கு உரிய துறையின் மூலமாகஅனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது குறித்த செய்தி பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பின் மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும்.
இவையெல்லாம் தெரிந்தும் சில ஊடகங்கள் அதைப் பாராட்ட மனமில்லாமல் தி.மு.க.-விற்கு எதிரான அஜெண்டாவை நிறைவேற்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கையினை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்த பின்பும் ஆழ்மனதில் ஊறிய வன்மத்தோடு அவதூறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் நாங்கள் என்றைக்கும். யாரும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். தொழிலும் வளர வேண்டும் – தொழிலாளர்களும் வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை! தொழிற்சங்கங்களை புரட்சியின் பள்ளிக் கூடங்கள் என்பார்கள். அத்தகைய தொழிற்சங்கத் தோழர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் உங்களில் ஒருவனாக – இந்த மே தின நினைவுச் சின்னத்திற்கு நான் வீரவணக்கத்தை செலுத்தியிருக்கிறேன் . தொழிலாளர்கள் உரிமைகளைக் காப்பதோடு – தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அனைத்துச் செயல்களையும் திராவிட மாடல் அரசு நிச்சயம் செய்து தரும் என்ற உறுதியை நான் தருகிறேன்.
இரத்தைத்தையே வியர்வையாகச் சிந்தி உழைக்கும் அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.