அக்.28.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால், பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதுடன் கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரிசய்ய தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தை வகுத்துள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது குடியிருப்பு அடிப்படையில் மாணவ மாணவிகளை வசிப்பிடம் அருகே சென்று தன்னார்வலர்கள் பங்கேற்புடன் கற்றல் வாய்ப்பினை வழங்க வழிவகை செய்கிறது .இது அரசு திட்டமாக மட்டுமின்றி பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள், பலதுறை பிரபலங்கள் என அனைவரும் சேர்ந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கம். இம்முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரது தீவிர பங்கெடுப்பு அவசியமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள படித்தவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
ஆறு மாதத்திற்கு வாரத்திற்கு ஆறு மணி நேரம் மாணவர்களை கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் 2 வாரத்திற்கு செயல்படுத்தி, சிறந்த கற்றல் விளைவுகளைக் கொண்டு, மேலாண்மை குழு மூலமாக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கிய பின் திட்டத்தில் இணைக்கப்படுவர். நவம்பர் 15ஆம் தேதிக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் படிப்படியாக தொடர் பணியாக நடைபெற இருக்கிறது.
திரைப்பட நடிகர் சூர்யா இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் பெற்றோர்கள் கல்வியாளர்கள் அனைவரும் சேர்ந்து இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோரோனா ஊரடங்கினால் காரணமாக பாதிக்கப்பட்ட கற்றல் இடைவெளியை போக்கி குழந்தைகளின் கல்வி ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.