மார்ச்.25.
தனியார் மருத்துவமனையில் ரூ 40 லட்சம் வரை செலவாகும் சிக்கலான அறுவை சிகிச்சையை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொண்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் வீரராகியத்தை சேர்ந்தவர் வடிவேல். பிப்ரவரி 5ஆம் தேதி வீரராக்கியம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். . தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் நாற்பத்தி எட்டு திட்டத்தின் மூலம் அவருக்கு சிடி ஸ்கேன் இலவசமாக எடுத்து பார்க்கப்பட்டது. வயிற்றுப் பகுதியில் சிறுகுடல் கணையத்தின் அருகில் கிழிந்து இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக டாக்டர்கள் குழு 5 மணி நேரம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உயிரை காப்பாற்றியது டன், 45 நாட்கள் கவனிப்பிற்கு பிறகு வடிவேல் உடல்நலம் தேர்ச்சி பெற்றுள்ளார். இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .
உயிர் பிழைத்தது அரிது
கணையத்திற்கு அருகில் இருக்கும் சிறுகுடல் கிழிவது மிகவும் அரிதான ஒன்று. அறுவை சிகிச்சை செய்வதும் சவாலான ஒன்று .நான்கில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கும் இந்த அறுவை சிகிச்சையில் வடிவேலும் ஒருவர். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டிருந்தால் ரூ 40 லட்சம் வரை செலவாகியிருக்கும்.(15நாள் தங்கிய செலவு உள்பட).
இதேபோல் தாந்தோணிமலையை சேர்ந்த பிரவின் என்ற இளைஞர் வயிற்றின் மேல் பகுதியில் கத்திக்குத்து காயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். நுரையீரல் மற்றும் குடல் பகுதியை பிரிக்கும் உதரவிதானத்தில் கிழிசல் ஏற்பட்டு கல்லீரல் கிழிந்து வயிறு முழுவதும் ரத்தம் கசிந்த நிலையில் கொண்டுவரப்பட்டதால் உடனடியாக கல்லீரல் மற்றும் உதரவிதானம் சரி செய்யப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .
இதேபோல் தங்கதுரை 55 என்பவர் இடதுபக்க முகவலி இடதுபக்க கண் வீக்கததுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். மேலும் இவருக்கு அதிகப்படியான சர்க்கரை ஆஸ்துமா உடல் பருமன் ஆகியவை இருந்தன. கரும்பூஞ்சை இருப்பதும் தெரியவந்தது. டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர் . மேலும் நிபுணர்கள் தங்கதுரைக்கு பல் சீரமைப்பு செய்தனர். செயற்கை இடது மேல் அன்னம் பொருத்தினர்.
டாக்டர்களுக்கு பாராட்டு
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் முத்துச்செல்வன் இந்த தகவலை தெரிவித்தார் . அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர்கள் டாக்டர்கள் வடிவேல், தெய்வநாதன், சங்கய ராஜா தலைமையில் டாக்டர்கள் லட்சுமணன், அக்சர் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் டாக்டர்கள் ராணி மற்றும் பிரேம குமாரி ஆகியோர் தலைமையில் டாக்டர் திலகம் ஆகியோரும் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர் . அனைத்து டாக்டர்களையும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் முத்துச்செல்வன் பாராட்டினார்.