ஜூலை.3.
ஜவுளி தொழில், கொசு வலை, வாகனங்களுக்கு கூண்டு கட்டுதல் உள்ளிட்ட தொழில்கள் நிறைந்த கரூர் மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஒரே பேருந்து நிலையத்தில் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர் . பேருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மட்டுமின்றி வேலைக்காக மட்டுமே தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் 1987 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது 35 ஆண்டுகளாக ஒரே பேருந்து நிலையத்தில் பயணிகள் நெரிசலை அனுபவித்து வருகின்றனர் . 1995ஆம் ஆண்டு கரூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், என படிப்படியாக அனைத்து துறை அலுவலகங்களும் திறக்கப்பட்டன. எனினும் பேருந்து நிலையம் மாற்றப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு முதல் கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது 26ஆண்டுகளாகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது. .முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்பு தற்போதைய கரூர் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் சிறிய அளவில் கரூர் பேருந்து நிலையம் இயங்கி வந்தது. அதன்பிறகு தற்போது உழவர் சந்தை இருக்கும் இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டது.
கரூரில் தற்போதைய பேருந்து நிலையம் ஆனது ஏ கிரேடு என அழைக்கப்பட்டாலும் போதுமான பேருந்துகளை நிறுத்த முடியாத நிலையிலும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் தான் உள்ளது. 70 பேருந்துகள் வரை நிறுத்தமுடியும். ஆனால், தினமும் ட்ரிப் அடிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை 1,000-க்கும் அதிகம்.
சுக்காலியூர் தோரணகல் பட்டி, ஆட்சி மங்கலம், என மாற்றி மாற்றி இடங்களை அறிவித்தும் பேருந்து நிலையம் அமைந்தபாடில்லை. ஏதாவது ஒரு இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை கொண்டு வந்தால் போதும் என்கிற மனநிலை மாவட்ட மக்களின் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.
கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் , புதிய திட்டங்களை துவக்கி வைத்தும் பேசிய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் .இதனை அடுத்து புதிய பேருந்து நிலைய வடிவமைப்பு முன்னேற்பாட்டு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.