மே.18.
பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு-
30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திலிருந்து விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும்.
ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு எதையும் வெல்லும் திறன் உண்டு எனத் தாய்மையின் இலக்கணமாக நின்றுள்ளார் அற்புதம் அம்மாள் என்னும் அயராத போராளி. Perarivalan வழக்கின் தீர்ப்பு என்பது மனிதவுரிமை அடிப்படையில் மட்டுமல்லாமல், மாநில உரிமை சார்ந்தும் வரலாற்றில் இடம்பெறத்தக்கது.
மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பைப் பெற்று இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியியலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசில் தமிழ்நாடு நிலைநாட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் கருத்து
வைகோ-
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
தொல்.திருமாவளவன்-
ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள்.
கமல்ஹாசன் –
ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போபோர்க்குணமும்.
தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி-
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.
அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.
பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி – பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியுள்ளோம். முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் – அற்புதம்மாள்.
எங்களுடைய சட்டப்போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை தங்கை செங்கொடி மரணம்தான். உலகத் தமிழர்கள் அனைவரும் என்னை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தனர். எதிர்காலம் குறித்து உறவினர்கள், நண்பர்களுடன் ஆலோசித்து முடிவு – பேரறிவாளன்.