ஜூன்.21.
தமிழ்நாடு முழுவதிலும் 1.535 ஆம்னிப் பேருந்துகள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னிப் பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன.
இவைகளால் அரசுக்கு, பேருந்து ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.1,08,000 வீதம் ஆண்டொன்றிற்கு குறைந்த பட்சம் ரூ.4,32,000 நிதி இழப்பு எற்படுகிறது. மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும். சட்டத்திற்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர்.
இதனை ஒழுங்குபடுத்துவதற்கு அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 ல் 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே முறையாக தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ் நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி. தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. விபத்துகள் நேரிடும்பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
18.06.2024 முதல் எக்காரணம் கொண்டும் அத்தகைய ஒரு ஆம்னிப் பேருந்தும் இனி இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள் மேற்சொன்ன பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டாம். அத்தகைய விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள்
www.tnsta.gov.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக இரத்து செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இனி இவை முடக்கப்படுவதால் பொதுமக்கள் இதில் பயணம் செய்ய இயலாது. இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. மாறாக, அவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்புடைய ஆம்னிப் பேருந்துகளின் உரிமையளர்களிடமே இந்த பாதிப்பிற்கான நிவாரணத்தைப் பெற முடியும்.
தமிழ்நாட்டிற்குள் முறையாக 1,535 ஆம்னிப் பேருந்துகள் இயங்கி வருவதால், பொதுமக்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான இடர்பாடுகளும் எழ வாய்ப்பில்லை. பிற மாநில ஆம்னிப் பேருந்துகளிலிருந்து இறக்கி விடப்பட்டால், மாற்று எற்பாடாக அவர்களின் ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே Detain செய்யப்படும். இத்தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.