அக்.22.
https://www.facebook.com/share/v/famH2mCQNpThX43o
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர் திருமண விழாவை நடத்தி வைத்து ஆற்றிய உரை வருமாறு:–
திமுக மாநில அரசு பொறுப்பேற்ற பிறகு, கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க அளவிலான ஒரு வல்லுநர் குழுவை அமைத்து அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, தான் அந்தப்பணியை நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.கடந்த மூன்றாண்டு காலத்தில், 2 ஆயிரத்து 226 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இது மிகப்பெரிய சாதனையாகும்.10 ஆயிரத்து 238 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் கொடுத்திருக்கக்கூடிய 1103 கோடி ரூபாய் நிதியின் மூலமாக 9163 பணிகள் திருக்கோவில்களில் நடைபெற்று வருகின்றன.•
இந்த மூன்று வருட காலத்தில் 7 ஆயிரத்து 69 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 6 ஆயிரத்து 792 கோடி ரூபாய் ஆகும். இந்த சாதனையைப் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு நமது அரசை மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 894 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு, கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு எடுத்த சிறப்புத் திட்டங்களில் ஒன்று, 1000 ஆண்டு பழமையான திருக் கோவில்களைப் பாதுகாப்பது ஆகும். 426.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2774 கோவில்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 37 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றது.•திருக்கோவிலுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வழங்கி அதில் இருந்து கிடைக்கப் பெறும் வட்டித் தொகையில் வழிபாடுகள் நடந்து வருகின்றன. அந்த தொகையை 2 இலட்சமாக உயர்த்தியதும் நமது கழக அரசு தான். இத்திட்டத்தின்படி, 17 ஆயிரம் கோவில்களுக்கு முதலீட்டுத் தொகையாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தோம்.
இந்த 17 ஆயிரம் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நமது அரசு தான் தொடங்கியது.கழக அரசு பொறுப்பேற்ற பிறகு மலைக் கோவில்களிலும், அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் திருக்கோவில்களிலும் பக்தர்களின் நலன் கருதி மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன. 17 கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு, 5 லட்சத்து 98 ஆயிரம் பக்தர்கள் இது வரை பயனடைந்துள்ளனர். 500 மூத்த குடிமக்கள் இராமேஸ்வரம், காசிக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.1008 மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.1003 பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.1014 பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கு ஆன்மிக பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு திருக்கோவில்களில் மட்டும் இருந்த நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு ஒன்பது கோவில்களை விரிவுபடுத்துகிறோம்.ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் இப்போது 760 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக தினந்தோறும் 92 ஆயிரம் பேர் இதனால் பசியாறுகின்றனர்.கடந்த ஆட்சியில், தங்க முதலீடு திட்டம் செயல்படாமல் இருந்தது. இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை நாம் வென்று, ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் இத்திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். 257.22 கோடி ரூபாய் மதிப்பிலான 442 கிலோ சுத்த தங்கக் கட்டிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 5.79 கோடி ரூபாய் ஆண்டுக்கு வட்டியாகக் கிடைக்கிறது. இதனை கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம்
இதெல்லாம் கொஞ்சம்தான். இப்படி ஏராளமான சாதனைகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தொடர்பான வழக்கு 2006 முதல் நடந்து வந்தது. அதில் வெற்றிகரமான தீர்ப்பைப் பெற்று 24 அர்ச்சகர்கள் இன்று நம்மை நியமித்துள்ளோம்.தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து உடன்பாடான தீர்ப்பைப் பெற்றுள்ளோம்.திருக்கோவில் தமிழில் அர்ச்சனை செய்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.•திருக்கோவில்களில் நடைபெறும் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்க தடையாக இருந்த வழக்கில் இறுதித் தீர்ப்பைப் பெற்று திருப்பணிகளைத் தொடங்கினோம்.
1988 ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் குறித்த வழக்கை முடித்து, குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம்.•1995 முதல் நடந்து வந்த சிவகங்கை அருள்மிகு சுவர்ண மூர்த்தி வரர் கோவில் தேரோட்ட வழக்கையும் முடித்து தேரோட்டத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறோம்.•பொழிச்சலூர் அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில் தொடர்பான வழக்கு 2003 முதல் நடைபெற்று வந்தது. அதற்கு சாதகமான தீர்ப்பை பெற்று கோவில் சொத்தை பாதுகாத்தோம்.சிதம்பரம் அருள்மிகு சபாநாயகம் திருக்கோவில் கனகசபை மீது ஏறி வழிபாடு நடத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உடன்பாடான தீர்ப்பை பெற்றதால், பக்தர்கள் தற்போது தடையின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.செயல் அலுவலர் நியமனம், பணியாளர்கள் மாறுதல், கல்லூரிகள் தொடங்குதல், தங்கக் கட்டிகள் உருக்குதல், அறங்காவலர் குழு அமைத்தல், அறங்காவலரிடம் செங்கோல் வழங்க மறுத்தல் என பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அதிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.திருச்செந்தூர், திருவட்டாறு, சங்கரன்கோவில், வடலூர், வேலூர், கந்தர்வகோட்டம், கள்ளக்குறிச்சி, தேக்கம்பட்டி, மயிலாப்பூர் என பல்வேறு ஊர் கோவில்களின் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து கோவில்களின் செயல்பாடுகளை தடங்கலின்றி செய்து வருகிறோம்.
இதையெல்லாம் உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்; நன்றாக கவனியுங்கள் – உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள். பக்தியை தங்களது பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்தி வருபவர்களால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் பராசக்தி திரைப்படத்தில் ஒரு வசனத்தை வைத்திருந்தார்; கோயில்கள் கூடாது என்பது நமது கொள்கை அல்ல. கோயில்களை கொடியவர்களின் கூடாரமாக ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் நமது இலட்சியம் என்று சொன்னார்.நமது சாதனைகளை தடுக்கத்தான் இப்படி பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த வழக்குகளை எல்லாம் சட்டப்படி முறியடித்து நமது சாதனை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.அத்தனை மதங்களையும் சமமாக மதித்து, எல்லோருடைய உரிமைகளையும் காக்கின்ற அரசாக நமது அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இது திராவிட மாடல் அரசு என்று கம்பீரமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.