பிப்.26.
அரவக்குறிச்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியினை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் கலெக்டர் கூறியது-
முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சூரிய கூடார உலர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.
சூரிய கூடார உலர்த்தியில் வேளாண் விளைபொருட்களை உலர வைப்பதன் மூலம் அவற்றை உலர்த்துவதற்கான கால அளவு, கூலியாட்கள் செலவு அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு ஆகியவை குறைகிறது. குறிப்பாக. விளைபொருட்களை சுகாதாரமான முறையில் இயற்கை தன்மை மாறாமல் உலர்வதால் அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறது.
மேலும், பூஞ்சைக்காளான் படிவதும் தவிர்க்கப்படுகிறது.குறிப்பாக, சூரிய கூடார உலர்த்தியில் கொப்பரை தேங்காய் பூஞ்சை தொற்றின்றி உலர்வதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் போன்ற வேதிப் பொருட்களின் பயன்பாடுகள் தவிர்க்கப்படுகிறது. மேலும், சூரிய கூடார உலர்த்தியில் கொப்பரை தேங்காய். நிலக்கடலை, வாழை, நெல்லி, முருங்கை இலை, கருவேப்பிவை, பாக்கு, தேயிலை. மிளகாய், இஞ்சி, கிராம்பு போன்றவற்றை சுகாதாரமான முறையில் உலர்த்தி, மதிப்புக்கூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம். விவசாயிகளின் தேவைக்கேற்பவும். இட வசதிக்கேற்பவும் சூரிய கூடார உலர்த்திகள் 400 முதல் 1000 சதுர அடி பரப்பளவு வரை அமைத்துத் தரப்படுகிறது.
சூரிய கூடார உலர்த்தி அமைப்பதற்கு ஏற்படும் செலவில் சிறு குறு விவசாயிகள். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 60 விழுக்காடு மானியமாக அதிகபட்சம் ரூ.3.50 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்களுக்கு மொந்த விலையில் 50 விழுக்காடு மானியமாக அதிகபட்சம் ரூ.3.00 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 3.5 ஆண்டுகளில் மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ. 15.59 இலட்சம் மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி அமைத்துத் தரப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றையதினம் அரவக்குறிச்சி வட்டத்தில் விவசாயி சரஸ்வதி, வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ரூ.3.43 இலட்சம் மானியத்துடன் 801 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தி தேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று கரூர் மாவட்டத்தில் கடந்த 3.5 ஆண்டுகளில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம். வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்கள். சூரிய ஒளி மின்வேலி அமைத்தல், மின் மோட்டார் பம்ப்செட்டுகள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல். இவ்வாடகை நில மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 371 விவசாயிகளுக்கு ரூ.3.31 கோடி மதிப்பீட்டில் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விவரங்களைப் பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் கரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் செயற் பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் செயல்படும் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளார் அலுவலகம் அல்லது வட்டார வேண்மை பொறியியல் உதவி பொறியாளர். இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது. வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் சக்திவேல், உதவிப் பொறியாளர் காளீஸ்வரி. உடனிருந்தனர்.