மீட்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் 17 நாட்களுக்குப் பின், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஒருவர் பின் ஒருவராக சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். முதலாவது நபர் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள், உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சுரங்கத்தில் இருந்து முதலில் 5 பேர் வெளியே வந்தனர். தொடர்ந்து 15 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், 8 பேரை மீட்க வேண்டி இருந்தது. இறுதியாக சுரங்கத்தினுள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் முழுமையாக மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும், உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலை அணிவித்து ஆரத்தழுவி வரவேற்றார். 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.