மார்ச். 4.
கரூர் குள்ளம்பட்டியில் துணிநூல் துறையின் மானியத்துடன் ரூ.5.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா- கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் ரூ.45.89 இலட்சம் மதிப்பீட்டில் கைத்தறி துறையின் சார்பாக புதிதாக கட்டப்பட்ட பொது வசதி மையம் என மொத்தம் ரூபாய் 6 கோடியே 35 இலட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை இன்று மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அரசு செயலர் அமுதவள்ளி.தலைமை வகித்தார். கைத்தறி துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், துணிநூல் துறை இயக்குநர் லலிதா. கலெக்டர் தங்கவேல் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் கூறியதாவது-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாட்டினை 2030-ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட இலக்கு நிர்ணயித்துள்ளார். இலக்கினை விரைவில் எய்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் துணிநூல் துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50 விழுக்காடு அல்லது ரூ.250 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசால் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் விதமாக கரூர் மாவட்டத்தில்VMD Textile Park. Green World Textiles மற்றும் Senthil Andavar Textiles ஆகிய மூன்று நிறுவனங்கள் செயல்பட உள்ளது.
இப்பூங்கா சார்பாக ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டது. இப்பூங்காவின் கட்டுமானப்பணிக்காக தமிழ்நாடுஅரசு ரூ.2.20 கோடி (தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50 விழுக்காடு) மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், நானதுதேதி வரை இரண்டு கட்ட தவணையாக ரூ. 1.32 கோடி நிதி விடுவித்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காஅமைக்கும் திட்டத்தின் கீழ் 10 பூங்காக்கள் அமைத்திட கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்களிடமிருந்து விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ள நிலையில், 8 பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கி கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.
துணி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று காட்டன் கொள்முதல் செய்ய செஸ் வரியை நீக்கி உள்ளார்கள். ரூ.6.00 கோடி மதிப்பில் டெஸ்டிங் லேப் அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள். டெக்ஸ்டைல் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது அதில் கரூர் பகுதி அதிக அளவில் பங்கு பெறுகிறது.
பெரிச்சிபாளையம் திரு.வி.க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக, வேலுச்சாமிபுரம் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் அமைந்துள்ள பொதுவசதி மையம் திறந்து வைக்கப்பட்டது.
இம்மையத்தில் மாதம் ஒன்றுக்கு 30 கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக கரூர் மாவட்டத்தில் உள்ள 43 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த நெசவாளர்கள் மற்றும் தனியார் நெசவாளர்களும் பயன்பெறுவார்களென தெரிவித்தார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் .மாணிக்கம் (குளித்தலை). இளங்கோ(அரவக்குறிச்சி) சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்).கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணை மேயர் ப.சரவணன், ஆணையர் சுதா, மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ். ராஜா. சக்திவேல். அன்பரசு துணிநூல் துறை துணை இயக்குநர் தமிழ்செல்வி கைத்தறித்துறை உதவி இயக்குநர் பழனிவேல் கலந்து கொண்டனர்.