செப்.19.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கரூர் வட்டத்தில் முகாமிட்டு உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளான இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது, நேற்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது. கரூர் வட்டத்திற்குட்பட்ட 22 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் குடிநீர் பணிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கள ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 48 பாரதிதாசன் நகரில் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்து பொது மக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்தும், தாந்தோணி மலை வெங்கடாசல நகர் பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் விவசாயிகளிடமிருந்து தினசரி பால் கொள்முதல் செய்யப்படுவதையும். விவசாயிகளிடம் தங்களுடைய கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. ஏழூர் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தின் சுகாதாரம், காலை உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் சரவணணன், 3 வது மண்டல குழு தலைவர் ராஜா, மகளிர் திட்ட இயக்குனர்.சீனிவாசன், சத்துணவு அலுவலர் தேன்மொழி, மாநகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், ஆவின் துணை பதிவாளர் (பால் வளம்)கணேசன், ஆவின் மேலாளர்கள் முருகன், துரையரசன் ஆகியோர் உடனிருந்தனர்.