டிச.26.
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் டாக்டர். மகேஸ்வரி கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி 1.01.2025 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், வெளிநாட்டு வாக்காளர் ஒருவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் பட்டியலில் இருந்து இறப்பு, இடம் பெயர்வு, இரட்டை பதிவு ஆகியவற்றை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் ஆகியவைகள் தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 16.112024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாம்களில் 16.11.2024 அன்று 4908 படிவங்களும், 17.11.2024 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 7707 படிவங்களும், 23.11.2024 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 4595 படிவங்களும். 24.11.2024 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 8634 படிவங்களும் என மொத்தம் 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மட்டும் பெறப்பட்ட 25844 படிவங்கள் மற்றும் 28.11.2024 வரை பெறப்பட்ட படிவங்கள் மீதும் எதிர்வரும் 24.12.2024 -க்குள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் முடிவு எடுக்கப்பட்டு 06.01.2025 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில், புதிய வாக்காளர், ஒரே தொகுதிக்குள் பாகம் மாறுதல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களுடன் அதிகாரி டாக்டர் மகேஸ்வரி ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக படிவங்கள் அளித்தவர்களின் இல்லங்கள் உள்ள கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேரணக்கல்பட்டி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏமூர், உப்பிடமங்கலம், வெள்ளியணை மற்றும் பாலராஜபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது, குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ. மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா. கரூர் ஆர்டிஓ முகமது பைசல், தேர்தல் வட்டாட்சியர் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.