ஜூன்.19.

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில், அட்லஸ் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். கரூர் எம்.பி. ஜோதிமணி. எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில் பாலாஜி பேசுகையில், முதலமைச்சர் அவர்கள் நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு வருவாய்த் துறையின் சார்பாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பெரூராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வீடு கட்டி குடியிருந்த 11.037 பயனாளிகளுக்கும் மற்றும் 18.126 காலியிடப் பயனாளிகள் என மொத்தம் 29.263 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 28,041 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 1275 பயனாளிகளுக்கு இன்றைய தினம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1998 ம் ஆண்டு சமத்துவபுரம் கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டபோது 100 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு. மேற்கு. கருப்பம்பாளையம், அப்பிபாளையம். பள்ளபாளையம், தாளப்பட்டி, மின்னாம்பள்ளி, நெரூர் வடக்கு. தெற்கு அச்சமாபுரம், சோமூர், பஞ்சமாதேவி, ஆத்தூர். காதப்பாறை, மண்மங்கலம், கோயம்பள்ளி. குப்புச்சிபாளையம், நன்னியூர் மற்றும் புஞ்சை கடம்பங்குறிச்சி ஆகிய 19 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 1275 தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். டிஆர்ஓ.கண்ணன், மேயர். கவிதா, ஆர்டிஓ.முகமது பைசல், தாசில்தார்கள் மோகன்ராஜ், குமரேசன், மகேந்திரன், மண்டலக் குழுத் தலைவர் ராஜா கலந்து கொண்டனர்.












