டிச.2.
ம.நீ.ம மாநில செயலாளர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை-
சர்வதேச சந்தையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக இருந்து அம்மாத இறுதியில் ஒரு பேரல் 72டாலர் என்கிற நிலையில் இருந்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் காட்டி வணிக பயன்பாட்டிற்கான 19கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலையை நடப்பாண்டில் மட்டும் 10வது முறையாக 101.00ரூபாய் உயர்த்தி கடந்த ஜனவரி மாதம் 1463.50என இருந்த சிலிண்டர் விலையை தற்போது டிசம்பர் மாதம் 2234.50 என்கிற விலைக்கு கொண்டு வந்து ஓராண்டிற்குள் சுமார் 770.00ரூபாய் உயர்த்தி உணவகங்கள், தேனீர் கடை உரிமையாளர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியிருக்கும் ஒன்றிய அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் முற்றிலுமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தொழிலாளர்களுக்கு ஊதியமும், கடை வாடகையும் கொடுக்க இயலாமலும், மின்கட்டணம் கூட செலுத்த முடியாத சூழ்நிலையிலும் சிக்கி உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவோர் கடுமையான இன்னல்களை சந்தித்து வரும் வேளையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் தொடர்ச்சியாக உயர்த்துவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வரும் சூழலில் கூட அதன் பலனை பொதுமக்களுக்கும், உணவகங்கள், தேனீர் கடை உரிமையாளர்களுக்கும் வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களின் கஜானாவை மட்டுமே நிரப்பிட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு மேலும், மேலும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திக் கொண்டே செல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த தொடர் விலை உயர்வு காரணமாக உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவோர் பெருத்த இழப்பை சந்தித்து வருவதோடு, தற்போதைய சூழலில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியே ஆகவேண்டும் என்கிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே நடப்பாண்டில் 10வது முறையாக உயர்த்தப்பட்டுள்ள வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 72டாலர் என்கிற நிலைக்கு குறைந்திருப்பதால் 19கிலோ சிலிண்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 500.00ரூபாய் வரை விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
மாநில செயலாளர்
மக்கள் நீதி மய்யம் – தொழிலாளர் நல அணி.
02.12.2021