செப்.11.
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் 1,000 -வது குடமுழுக்கு விழா சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது.
மாநில அளவிலான வல்லுநர் குழுவால் 7,142 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 2,235 திருக்கோயில்களில் ரூ.1,120 கோடி மதிப்பீட்டிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படி திருக்கோயில்களை மேம்படுத்தும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு அனைத்து தரப்பினரும் போற்றிடும் வகையில் செயலாற்றி வரும் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1,000 – வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் சமய சான்றோர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பேசுகையில்,
சீதனச்சேரியில் உள்ள 300 ஆண்டு பழமையான கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை மாரியம்மன் கோவில் 150 ஆண்டு பழமையான கோவிலுக்கு திருப்பணி நடைபெறாமல் இருந்து குடமுழுக்கு விழா நடைபெற்றிருக்கிறது.
அதேபோல, தமிழகத்தில் இருக்கக்கூடிய கிராமப்புறங்களில் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதிகளில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றுடன் ரூபாய் ஒரு லட்சம் அந்தத் திருப்பணிகளுக்காக அரசின் சார்பாக இந்து அறநிலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட நிதியை இரண்டு லட்ச ரூபாய் உயர்த்தப்பட்டது.
10 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோவில்களுக்கு மட்டும்தான் திருப்பணிகள் அ.தி.மு.க ஆட்சியில் நடத்தி இருந்தார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தி 1250 ஆதிதிராவிடர் வசிக்கின்ற பகுதிகளில் இருக்கின்ற கோவில்களும் கிராமப்புறத்தில் இருக்கின்ற திருக்கோவில்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இரண்டு லட்ச ரூபாய் உயர்த்தி இருக்கிறார் என்றார்.