ஜூலை.27.
மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. பின்னர், 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்றிரவு 35,400 கன அடியாகவும், இன்று காலை 45,400 கன அடியாக இருந்த நிலையில் மதியம் 12 மணிக்கு 60,400 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 60,000 கன அடியிலிருந்து 75,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 75,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவேரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமராவதியில் நீர்வரத்து அதிகரிப்பு
26.07.2025 அன்று இரவு 7.30 மணிக்கு அமராவதி நீர்த்தேக்கம் முழு நீர்மட்டத்தை எட்டியது. 12000 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், அரவக்குறிச்சி, செட்டிபாளையம். ஆண்டங்கோயில் கரையோர கிராமங்கள் வழியாக செல்வதால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












