செப்.1.
கரூர் மாவட்டம். காணியாளம்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி முகாம்” என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் தெரிவித்ததாவது:-
கரூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுதல் சார்ந்து வழிகாட்டுவதற்காகவும் கல்லூரிகளில் நேரடிச் சேர்க்கை மேற்கொள்ளவும். “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப் படி முகாம்” என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கரூர் கோட்டத்திற்குட்பட்ட கரூர் தாந்தோணி. அரவக்குறிச்சி. க.பரமத்தி ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கும், குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை. கிருஷ்ணராயபுரம், தோகைமலை & கடவூர் ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக காணியாளம்பட்டியில் நடைபெற்றது.
குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக உயர்கல்வி பயிலா சூழ்நிலை மாற்றப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம். மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் கல்லூரிப் படிப்பிற்கு மாதம் ரூ. 1000 பெறலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக உதவித்தொகையும். மாணவியர்களுக்கான இலவச விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். வித்யா லட்சுமி போர்ட்டல் மூலம் பதிவு செய்து கல்விக் கடன் பெற்று மாணவர்கள் பயன்பெறலாம். கரூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் மாணாக்கர்கள் தங்களின் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றாற்போல் பட்டப் படிப்புகளை தேர்வு செய்துகொள்ளலாம் என்றார்.
இம்முகாமில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு கலை&அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த படிப்புகள், பல்வகை தொழில்நுட்ப படிப்புகள் (Polytechnic) தொழிற்பயிற்சி மையப்படிப்புகள் (ITI), ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் படிப்புகள் சார்ந்த விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்கள்.
கல்லூரிகளில் நேரடிச் சேர்க்கை (Spot Admission) மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யபட்டது. மேலும் இம்முகாமில் உயர்கல்வி பயில வங்கிக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள், உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்து காட்சி அரங்குகள் அமைத்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீ, முதன்மைக் கல்வி அலுவலர் செல்வமணி. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, அரசினர் பாலிடெக்னிக் முதல்வர் லோகநாதன் கலந்து கொண்டனர்.












